Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

குடி போதையால் நடக்கும் குற்றசம்பவங்களுக்கு ஏன் தமிழக அரசை பொறுப்பாக்கக்கூடாது? உயர்நீதிமன்றம்

குடி போதையால் நடக்கும் குற்றசம்பவங்களுக்கு ஏன் தமிழக அரசை பொறுப்பாக்கக்கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கவுதமன், குருசாமி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட வீராசாமி உள்பட 2 பேர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், தமிழக அரசை கடிந்துக்கொண்டது.
குடி போதையால் நடக்கும் குற்றசம்பவங்களுக்கு ஏன் தமிழக அரசை பொறுப்பாக்கக்கூடாது? என கேள்வியை எழுப்பியுள்ளது. ஜாமீன் கோரியவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

மதுபான விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 31 ஆயிரத்து 757 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பது இந்த நீதிமன்றத்துக்கு கிடைத்த ஆவணங்கள் மூலம் தெரிகிறது. தமிழக அரசின் மொத்த வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு வருவாய் மது விற்பனையால் தான் கிடைக்கிறது என்பது துரதிர்ஷ்டவசமானது. குடிபோதையில் விபத்துகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது.

மது கொள்கையில் தமிழக அரசு மாற்றங்களை கொண்டு வராவிட்டால், இந்த குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். குற்ற செயலை பொறுத்தமட்டில் குற்றம் செய்தவர்களுக்கும், அதற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும், தூண்டியவர்களுக்கும் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. எனவே, குடி போதையில் நடக்கும் குற்றச்செயல்கள் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தமிழக அரசே குற்றம் செய்ய தூண்டியதாக ஏன் கருத கூடாது?. மதுவின் மூலமாக குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

எனவே, குடிபோதையால் நடக்கும் குற்ற சம்பவங்களுக்கு மது விற்பனையை மேற்கொண்டு வரும் தமிழக அரசை பொறுப்பாக்க வேண்டும். மிகப்பெரிய சமுதாய சீரழிவுக்கு காரணமாக உள்ள இந்த விவகாரத்தில் அரசு நழுவி செல்வதை நீதிமன்றம் அனுமதிக்காது என உயர்நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், குடி போதையால் நடக்கும் குற்றசம்பவங்களுக்கு ஏன் தமிழக அரசை பொறுப்பாக்கக்கூடாது? என்பது தொடர்பாக இந்த நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் வக்கீல் சங்கங்கள் தங்களது விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. வழக்கு விசாரணையை ஏப்ரல் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.