Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

மத்திய நிதியமைச்சர் 2018-19ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இந்தியில் தாக்கல் செய்தது திட்டமிட்ட, அப்பட்டமான மொழித்திணிப்பு நடவடிக்கையே : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மொழிச் சமத்துவத்தை தாக்கும்   இந்தி நிதி நிலை அறிக்கை..!
எதிர்ப்புக் குரல் எழுப்ப தமுஎகச வேண்டுகோள்


சென்னை, பிப்.1-

மத்திய நிதியமைச்சர் 2018-19ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இந்தியில் தாக்கல் செய்தது திட்டமிட்ட, அப்பட்டமான மொழித்திணிப்பு நடவடிக்கையே என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சாடியுள்ளது.


இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் வியாழனன்று (பிப்.1) வெளியிட்ட அறிக்கை வருமாறு:


சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஆங்கிலத்தில் அல்லாமல் இந்தி மொழியில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி இவ்வாறு செய்திருப்பது, அந்நிய மொழியைத் தவிர்த்து ஒரு இந்திய மொழியில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று மேலோட்டமாக எடுத்துக்கொண்டு மகிழ்வதற்கானதல்ல. மாறாக, அப்படியொரு எண்ணத்தை ஏற்படுத்தி, பாஜக-வின் ஒற்றை மொழி ஆதிக்கக் கொள்கைப்படி இந்தியைத் திணிக்கிற ஏற்பாடேயாகும். இதுவரையில் திரைமறைவாகச் செய்யப்பட்டு வந்தது, இப்போது பல மடங்கு ஆணவத்தோடு அப்பட்டமாகச் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்குகிற அரசமைப்பு சாசனத்தையும், இந்தி பேசாத மக்கள் ஏற்கிற வரையில் ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும் என்ற முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வாக்குறுதியையும் அவமதிக்கிற நடவடிக்கையே இது. தேசிய அளவிலான இந்த மிக முக்கியமான ஆவணத்தை அனைத்து மாநில மொழிகளிலும் வெளியிடுகிற அக்கறையோ பொறுப்போ மத்திய ஆட்சியாளர்களிடம் இல்லை. ஆங்கிலம், இந்தி இரண்டு மொழிகளில் மட்டுமே வெளியிடுவது என்பதில் கடந்த கால நடைமுறையைப் பின்பற்றுகிற நரேந்திர மோடி அரசு, நாடாளுமன்றத்தில் அதை எந்த மொழியில் தாக்கல் செய்வது என்று வருகிறபோது, கடந்த கால நடைமுறையிலிருந்து விலகியது திட்டமிட்ட இந்தித் திணிப்பேயாகும்.

நிதிநிலை அறிக்கையில் உள்ள மக்களுக்குப் பாதகமான பல தாக்குதல்கள் ஒருபுறமிருக்க, மக்களின் மொழி உரிமை மீதும் நாட்டின் பன்முகப் பண்பாட்டுத் தளத்தின் மீதும் தொடுக்கப்பட்டிருக்கிற இந்த வன்மமான தாக்குதலை தமுஎகச வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ் உரிமைக்காகவும் இந்திய மொழிகளின் சமத்துவத்துக்காகவும் இயக்கம் காண்கிற அனைவரும் இதை எதிர்த்துக் குரலெழுப்ப வேண்டும் என தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.