இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 279,304(A),337,338
பொதுப்பாதையில் வாகனங்களை முரட்டுத்தனமாக ஓட்டுதல் அல்லது சவாரி செய்தல் :
விபத்து வழக்குகள் :
மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக அல்லது வேறு எவருக்கேனும் காயம் அல்லது கேடு அநேகமாக விளைவிக்ககூடிய வகையில் பொதுப்பாதையில் வண்டி எதையும் முரட்டுத்தனமாக அல்லது கவனமின்றி ஓட்டுகிற அல்லது சவாரி செய்கிற ஒருவர் 6 மாதம் சிறை அல்லது 1000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டிக்கப்படுவார்.
நபர் ஒருவர், மோட்டார் வாகனச் சட்டம் 1939 பிரிவு 116ன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு வழக்கொன்றில் விடுதலையாகியிருக்கும்போது, அவர் மீண்டும் அதே சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 279ன் கீழ் குற்றம் சுமத்தி தண்டிக்கப்படுதல் கூடாது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 279ன்படி வாகனம் ஒன்றை முரட்டுத்தனமாகவும், கவனமின்றியும் ஓட்டுவது குற்றம் ஆவதுபோல், குதிரை போன்றவற்றில் அந்த வகையில் சவாரி செய்வதும் குற்றமாகும்.
வாகனம் என்பதில் மோட்டார் வாகனங்களுடன் மாட்டுவண்டி, மிதிவண்டி ஆகியனவும் உள்ளடங்கும்.
பேருந்து ஓட்டுனர்கள் பொதுப்பாதையில் தமது பேருந்துகளை போட்டி போட்டுக் கொண்டு ஒட்டுவது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 279ன்படி குற்றமாகும்.
நபர் ஒருவர் வாகனம் ஒன்றை முரட்டுத்தனமாகவும், கவனமின்றியும் ஓட்டி நபர் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தினால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். (304A)
நபர் ஒருவர் ஒரு மக்கள் கூட்டத்தின் நடுவில் வேண்டுமென்றே தாம் ஓட்டி வந்த வாகனத்தை செலுத்தி சிலருக்கு மரணத்தை ஏற்படுத்தினால், அவர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304(A)ன் கீழ் தண்டிக்கப்பட மாட்டார். மாறாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304ன் கீழ் தண்டிக்கப்படுவார்.
(304- கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவிக்ககூடிய குற்றத்திற்கான தண்டனை)
நபர் ஒருவர் வாகனம் ஒன்றை பிரேக் கோளாறுடன் ஓட்டி ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தினால், அவர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304(A)ன் கீழ் தண்டிக்கப்படுவார். ஆனால் அவர் ஓட்டிச் சென்ற வாகனத்தில் திடீரென பிரேக் கோளாறாகி அதன் காரணமாக விபத்து ஏற்பட்டு ஒருவர் இறந்துவிட்டால் அப்போது அவர் (ஓட்டுனர்) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304(A)ன் கீழ் தண்டிக்கப்பட மாட்டார்.
ஒருவர் வாகனத்தை வேகமாக ஓட்டுவது குற்றம் அல்ல. அவர் வாகனத்தை முரட்டுத்தனமாகவும், கவனமின்றியும் ஓட்டுவதே குற்றமாகும்.
ஓட்டுனர் ஒருவர் வாகனத்தை தவறான பக்கத்தில் (Wrong Side) செலுத்துவது தவறு கிடையாது ஆனால் அவர் தவறான பக்கத்தில் வாகனத்தை முரட்டுத்தனமாகவும், கவனமின்றியும் ஓட்டுவது குற்றமாகும்.
வாயிற் காவலாளி (Gateman) வாகனம் ஒன்றை உள்ளே வருவதற்கு வசதி செய்யும் வகையில் வாசல் கதவை திறந்து கொண்டிருக்கும் போது வாகனம் மோதி இறந்திருந்தாலும், நபர் ஒருவர் வாகனத்தின் பின் பகுதியில் மோதி இறந்திருந்தாலும், ஓட்டுநர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304(A)ன்படி படி தண்டிக்கப்பட மாட்டார்.
மனித உயிருக்கு அல்லது ஆடு, மாடுகள் போன்ற உயிரினங்களின் உயிர், உடற் பாதுகாப்பிற்கு அபாயம் ஏற்படும் அளவுக்கு முரட்டுத்தனமாக அல்லது கவனமற்ற வகையில் வாகனத்தை ஓட்டுவதன் மூலம் காயம் விளைவிக்கின்ற எவர் ஒருவருக்கும் 6 மாதம் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டிக்கப்படுவார்.
மனித உயிருக்கு அல்லது ஆடு, மாடுகள் போன்ற உயிரினங்களின் உயிர் மற்றும் உடற் பாதுகாப்பிற்கு அபாயம் ஏற்படும் அளவுக்கு முரட்டுத்தனமாக அல்லது கவனமின்றி வாகனத்தை செலுத்தி எவருக்கும் கொடுங்காயம் விளைவித்தால் அந்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
279 - ஒரு பொதுப்பாதையில் முரட்டுத்தனமாக வாகனத்தை ஓட்டுதல் அல்லது சவாரி செய்தல்
304(A) - கவனமின்மையால் மரணம் விளைவித்தல்
337 - உயிருக்கு அல்லது மற்றவர்களின் உடற் பாதுகாப்பிற்கு அபாயம் விளைவித்தல்
338 - உயிருக்கு அல்லது மற்றவர்களின் உடற் பாதுகாப்பிற்கு அபாயம் விளைவிக்கின்ற செய்கையால் கொடுங்காயம் விளைவித்தல்.