ஒருவரின் மரணத்தை விளைவிக்கும் செயல் கீழ்க்கண்ட நிலைகளில் கொலைக்குற்றம் ஆகின்றது.
1) மரணம் விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் ஒரு செயலை செய்வது மரணம் விளைவித்தல்.
2) ஒருவருக்கு மரணம் விளைவிக்ககூடிய உடற்காயம் இதுதான் என்று தெரிந்தே, அந்த உடற்காயத்தை உண்டு பண்ணும் கருத்தோடு ஒரு செயலை செய்து அவருக்கு மரணத்தை விளைவுத்தல்.
3) இயல்பான போக்கில் மரணத்தை விளைவிக்கத்தக்க தன்மை கொண்ட உடற்காயத்தை உண்டு பண்ணும் கருத்தோடு ஒரு செயலை செய்து மரணத்தை விளைவித்தல்.
4) ஒரு செயல், மரணத்தையோ, மரணம் விளைவிக்ககூடிய உடற்காயத்தையோ பெரும்பாலும் உடனடியாக தோற்றுவிக்கும் என்று தெரிந்தும், மரணத்தையோ, உடற்காயத்தையோ ஏற்படுத்தி ஒருவருக்கு மரணத்தை விளைவித்தல்.
கொலைக்குற்றம் செய்த ஒருவர் மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனையும், அபராதமும் விதித்து தண்டிக்கப்படுவார்.
கொலைக்குற்றத்திற்கான தண்டனை மனிதருக்கு மனிதர் வேறுபடுவதில்லை.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தண்டனைகளில் ஒன்றான மரண தண்டனையிலிருந்து, குற்றவாளி தான் ஒரு இளைஞர் என்றோ அல்லது பெண் என்றோ அல்லது வேறு காரணங்களை கூறியோ விலக்கு பெற முடியாது.
விதிவிலக்கு பற்றி இந்திய தண்டனைச் சட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை.
பெண் ஒருத்தி கைக்குழந்தையுடன் இருக்கிறாள் என்று காரணம் காட்டி விலக்கு பெற முடியாது.
கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்ற பிறகே தூக்கிலிடப்படுவாள்.
குற்றவாளி 60 அல்லது 70 வயதான கிழவன் என்று கூறி தண்டனையிலிருந்து விலக்கு பெற முடியாது.
குடும்ப மரியாதையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கொலை செய்தேன், எனக்கு கொலை செய்ய வேண்டும் என்ற உட்கருத்து இல்லை என்று கூறி விலக்கு பெற முடியாது.
கொலையை செய்ய காரணமாக இருந்தவர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டதால் தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என்று குற்றவாளி கோர முடியாது.
கொலை பார்த்த நேரடி சாட்சிகள் யாரும் இல்லாதபோது, சூழ்நிலை சாட்சியங்களால் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் போது, குற்றவாளி நேரடி சாட்சிகள் இல்லை என்று காரணம் காட்டி தண்டனையிலிருந்து விலக்கு பெற முடியாது.
கொலையை செய்த நபர், கொலை நடந்த இடத்திலிருந்து தான் தப்பி ஓடவில்லை, அதேபோல் தன்னை போலீசார் கைது செய்யும் போது எவ்வித தடையும் நான் ஏற்படுத்தவில்லை என்ற காரணங்களை காட்டி மரண தண்டனையிலிருந்து விலக்கு பெற முடியாது.
குற்றவாளி, விதவை தாய்க்கு ஒரே மகன் என்று காரணம் காட்டி விலக்கு பெற முடியாது.
சமாதானம் ஏற்பட்டு விட்டதால் தன்னை தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று குற்றவாளி கோர முடியாது.
சம்பவ இடத்தில் குற்றவாளிக்கு காயம் ஏற்பட்டிருப்பதை காரணமாக காட்டி குற்றவாளி விலக்கு பெற முடியாது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மரண தண்டனை அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதாகாது. மேலும் அது இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்பு 19 மற்றும் 21க்கு முரணாக செயல்படாது.
கொலையை செய்த இருவரில் யார் கொலை செய்தார் என்று தெரியவராத போது, அந்த இரு குற்றவாளிகளும் விடுதலை செய்யப்படலாம்.
அரசு தரப்பு குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிக்க தவறும் போது, நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்துவிடும். www.legalfirm.in