பெண் வழக்குரைஞர்கள்
Sarmiza Bilcescu என்பவரே (1891) முதல் பெண் ரோமானிய வழக்கறிஞர். இவர் அப்போதே சட்டத்தில் மிக உயர்ந்த படிப்பை முடித்துள்ளார். அப்போது பெண்கள் வாதிடுபவர்களாக இருந்தார்களா என்பது பற்றி தெரியவில்லை. ஆனால், ரோமானிய நீதிமன்றங்களில் பார்வையாளர்களாக பெண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவே பெரிய விஷயம்தான். இப்போதைய நீதிமன்ற நடைமுறைகளை ரோமானிய காலத்தோடு ஒப்பிட்டால் ஒன்று போலவே இருப்பது தெரிய வரும்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங் களில் முதன் முதலாக சட்டம் படித்து வழக்கறிஞர் கூடத்தில் பதிவு செய்த பெண்மணி என்ற பெருமையை பி.ஆனந்தா பாய் பெறுகிறார். 1923ஆம் ஆண்டுதான் பெண்கள் படித்த சட்டத்தை பதிவு செய்யலாம் என்கிற ஷரத்து அடங்கிய சட்டம் கொண்டுவரப்பட்டது(Legal Practioners act 1923.).
சென்னை பல்கலைக்கழகத்தில் 1929இல் சட்ட பட்ட யத்தைப் பதிவு செய்தார் ஆனந்தா பாய். நீதிமன்றத்தில் வழக்குரைஞராக வாதிடும் விருப்பம் ஆரம்பத்தில் அவ ருக்கு இல்லை. தென் மாநிலங்களில் எந்தப் பெண்ணுமே நீதிமன்றத்துக்கு வழக்கறிஞராக செல்லாதபோது அவர் மட்டும் செல்லத் தயங்கியிருக்கலாம். அதனால் அரசாங்க அலுவலகத்தில் வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்தார். அன்றைய அரசாங்கத்தையும் தொடர்பு கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவான பதில் அங்கு கிடைக்காததால் மாற்று ஏற்பாடாகத்தான் பயிற்சி வழக்கறிஞராக சேர்ந்துள்ளார்.
சென்னையின் 400 வருட வரலாறு என்ற புத்தகம் தவிர வேறு எந்த இடத்திலும் ஆனந்தா பற்றிய மூச்சு பேச்சு இல்லை என்பது நெருடலையே அளிக்கிறது. நான்கு மாநிலங்களுக்கும் சேர்ந்து முதல் பெண் வழக்கறிஞர் அந்தஸ்து பெற்ற பெண் பற்றிய குறிப்புகள் எங்கும் சேமித்து வைக்கப்படவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் சிறப்பு விருந்தினர் உரையில் வாட்ஸ் அப் மெசேஜில் வரும் கார்ட்டூன் போல பெண் வழக்கறிஞர்களுக்கு ஆனந்தா பாய் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்ற ஒற்றை வரி செய்தி மட்டுமே கிடைக்கிறது. தென் மாநிலங்களில் இயங்கிவரும் நீதிமன்றங்களில் விமன்ஸ் பார் அசோசியேஷன் கட்டாயம் இருக்கும். குறைந்தபட்சம் அந்த அமைப்பினராவது, ஆண்டுக்கு ஒருநாள் ஆனந்தா பாய் பிறந்த தினத்தையோ, அவர் வழக்குரைஞராக பதிவு செய்த நாளையோ, பெண் வழக்கறிஞர்களின் தினமாகக் கொண்டாடலாமே. ஏன் யாருக்கும் மனம் வரவில்லை என்ற கேள்வி விடை தெரியாமலேயே விம்மிக் கொண்டிருக்கிறது.
ஆனந்தா பாய் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் சீதா தேவ தாஸ். சென்னை மாகாணத்தில் வாதிட்ட முதல் வழக்குரைஞர் என்ற தகுதி இவருக்கும் உண்டு. பத்மினி ஜேசுதுரை (1986ல்)சென்னை உயர்நீதிமன்றத்தில் நுழைந்த முதல் பெண் நீதிபதி யாவார்.
தமிழக ஆளுநராக பதவி வகித்த பாத்திமா பீவி, நாட்டின் உயர்நிலை நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தில் பதவி வகித்த முதல் பெண் நீதிபதியாவார். உச்சநீதிமன்றத்தில் இப்போது நீதிபதியாக திகழும் பானுமதி, தமிழ்நாட்டை சேர்ந்த முதல் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி என்ற தகுதியை பெறுகிறார். போலிசாமியார் பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனை கொடுத்து இவர் வழங்கிய தீர்ப்பு காலத்தால் என்றும் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.
www.askadvocates.com