Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

CRL. R. C. NO - 755/2013 DT - 10.6.2015 - Section 498a+506-ii

புகார்தாரரான மருமகள் அளித்த புகாரின் பேரில் கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர்கள் மீது காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 498(அ), 406 மற்றும் 506(ii) ஆகிய பிரிவுகளின் கீழும், வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த புகாரை புலன் விசாரணை செய்த காவல்துறையினர் கணவர் மீது மட்டும் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் இறுதியறிக்கையை தாக்கல் செய்தனர். அந்த இறுதியறிக்கையை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.


வழக்கில் புகார்தாரர் அரசு தரப்பு சாட்சி 1 ஆக விசாரிக்கப்பட்டார். அவர் தனது சாட்சியத்தில் மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர்களும் தன்னை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறினார். இந்த சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு மாமனார் மற்றும் மாமியாரையும் வழக்கில் எதிரிகளாக சேர்க்க வேண்டும் என்று கோரி அரசு தரப்பில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 319 ன் கீழ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அனுமதித்து ஒரு உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து மாமனார் மற்றும் மாமியார் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தா‌க்க‌ல் செ‌ய்தனர்.

வழக்கை நீதிபதி. திரு. B. இராஜேந்திரன் விசாரித்தார்.

மாமனார் மற்றும் மாமியார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை புலன் விசாரணை செய்ததற்கு பின்னர்தான் புகார்தாரருக்கும், மாமனார் மற்றும் மாமியாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று காவல்துறையினர் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். அதனால் தான் காவல்துறையினர் மாமனார் மற்றும் மாமியாரை இறுதியறிக்கையில் சேர்க்கவில்லை. ஆனால் நீதிமன்றம் அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்திற்காக இவர்களை வழக்கில் சேர்க்க ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது, அந்த உத்தரவில் என்ன காரணத்திற்காக இவர்கள் வழக்கில் சேர்க்கப்படுகிறார்கள் என்று கூறவில்லை. மாமனார் மற்றும் மாமியார் பெயர்கள் FIR ல் இடம் பெற்றுள்ளது என்கிற ஒரே காரணத்துக்காக கீழமை நீதிமன்றம் அவர்களை வழக்கில் சேர்க்க ஆணை பிறப்பித்துள்ளது சட்டப்படி தவறான ஒன்றாகும் என்றார். மேலும் புகார்தாரர் தன்னுடைய சாட்சியத்தில் மாமனார் மற்றும் மாமியார் எந்த வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்று குறிப்பாக (Specific) எதையும் கூறவில்லை என்றும் வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாமனார் மற்றும் மாமியாரின் பெயர்கள் FIR ல் உள்ளதால், கீழமை நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 319 ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அனுமதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும், அந்த உத்தரவு சரியான உத்தரவு என்றும் கூறி வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி.....

உச்சநீதிமன்றம் " சரப்ஜித் சிங் Vs பஞ்சாப் மாநில அரசு (AIR-2009-SC-2799)(2009-16-SCC146)" என்ற வழக்கில், ஒரு வழக்கில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 319 ன் கீழ் ஒருவரை எதிரியாக சேர்ப்பதற்கு உத்தரவிடுவதற்கான வழக்கு முகாந்திரம் உள்ளதா? என்பதை நீதிமன்றம் ஆராய்ந்த பிறகு தான் அந்த நபருக்கு அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும் என்றும், ஒரு FIR ல் அல்லது ஒரு சாட்சி மற்ற நபர் அல்லது நபர்களை குறித்து சாட்சியமளித்துள்ளார் என்பதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 319 ன் கீழ் ஒரு உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாது. அந்த சட்டப் பிரிவில் கூறப்பட்டுள்ளதை நிறைவேற்றுவதற்கான காரணங்கள் அந்த வழக்கில் உள்ளது என்பது குறித்து நீதிமன்றம் அந்த உத்தரவில் குறிப்பிட வேண்டும். ஓர் ஆதாரமானது ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், குறைந்தபட்சம் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தும் அளவிற்காவது அது அமைந்திருக்க வேண்டும். இந்த சட்டப் பிரிவை பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் கடினமான பரிசோதனைகளை பயன்படுத்த வேண்டும். அந்த வழக்கில் எதிரியாக சேர்க்கப்பட உள்ள நபருக்கு தண்டனை அளிக்க போதுமான காரணங்கள் உள்ளதா என்பதை நீதிமன்றம் தனது கருத்தில் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

 அதேபோல் உச்சநீதிமன்றம் " ஹர்தீப் சிங் Vs பஞ்சாப் மாநில அரசு (2009-16-SCC-785)(2009-2-MLJ-CRL-653)" என்ற வழக்கில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 319 ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரமானது ஓர் உளத்தேர்வு அதிகாரம் மட்டுமில்லாமல் அசாதாரணமான ஓர் அதிகாரமாகும். அந்த அதிகாரத்தை எப்போதாவது, அவசியம் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் பயன்படுத்த வேண்டும். சில நபர்கள் அந்த வழக்கில் கண்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்று நீதிபதிகள் கருதுவதால் மட்டும் பயன்படுத்த முடியாது, மிகவும் வலுவான ஒன்றுக்கொன்று தொடர்புடைய சாட்சியங்கள் ஒரு நபருக்கு எதிராக இருந்தால் மட்டுமே அந்த அதிகாரத்தை நீதிமன்றம் பயன்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த வழக்கில் புகார்தாரரின் சாட்சியத்தை கீழமை நீதிமன்றம் சரியாக பரிசீலிக்கவில்லை, புகார்தாரரின் சாட்சியம் தெளிவாக இல்லை, மாமனார் மற்றும் மாமியார் மீது குறிப்பாக எந்த குற்றச்சாட்டையும் புகார்தாரர் தெரிவிக்கவில்லை, மாமனார் மற்றும் மாமியார் பெயர்கள் FIR ல் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் அவர்களை வழக்கில் எதிரிகளாக சேர்க்க முடியாது என்று மாமனார் மற்றும் மாமியாருக்கு எதிராக கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

 CRL. R. C. NO - 755/2013

DT - 10.6.2015

ஹேமலதா மற்றும் பலர் Vs ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், வடபழனி, சென்னை