ஒரு வழக்கில் மோசடியாக தயாரிக்கப்பட்ட ஆவணம் சான்றாவணமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது தெரியவரும் நிலையில் காவல்துறையில் யார் புகார் அளிக்க வேண்டும்?
நீதிமன்றமா? அல்லது காவல்துறையா?
ஒரு காசோலை மோசடி வழக்கின் எதிரியான பிரியங்கா என்பருக்கு ஒருவர் தனக்கு சொத்து இருப்பதாக கூறி ஜாமீன் (பிணையம்) வழங்கினார். ஆனால் பிணையம் வழங்கிய நபருக்கு அவ்வாறு சொத்துக்கள் ஏதும் இல்லை, சொத்தின் ஆவணங்கள் அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை என புகார்தாரருக்கு தெரிய வந்தது. அதனால் அவர் பிணையம் வழங்கிய அந்த நபர் மற்றும் பிரியங்கா மற்றும் பலர் மீது போலி ஆவணங்களை தயாரித்து நீதிமன்றத்தில் பிணையம் வழங்கியதாக கூறி குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு தனிநபர் புகாரை தாக்கல் செய்தார். அந்த புகாரை விசாரித்த நடுவர் அதனை காவல்துறை விசாரணைக்காக அனுப்பி வைத்தார். அந்த புகாரை புலன்விசாரணை செய்த காவல்துறையினர் பிணையம் வழங்கிய நபரை கைது செய்து கைது குறிப்புடன் (Arrest Memo) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நடுவர் காவல்துறையினர் தாக்கல் செய்த கைது குறிப்பை நிராகரித்ததோடு கு. வி. மு. ச பிரிவு 156(3) ன் கீழ் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதோடு வழக்கில் கண்ட இரண்டு நபர்களை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பை வழங்கும் போது நடுவர் கு. வி. மு. ச பிரிவு 195 ன் கீழான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றமோ அல்லது அதன் அலுவலரோ காவல்துறையில் ஒரு புகாரினை அளித்திருக்க வேண்டும், ஆனால் இந்த வழக்கில் அவ்வாறு எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
அந்த உத்தரவை எதிர்த்து இந்த மேல்முறையீடு பாம்பே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், உச்சநீதிமன்றம் "பால்சிங் மார்வா Vs மீனாட்சி மார்வா (2005-4-SCC-370)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். அந்த வழக்கில் "நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு வழக்கில் ஏற்கெனவே சான்றாவணமாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில், அந்த ஆவணம் நீதிமன்றத்தின் பொறுப்பில் இருக்கும் நிலையில், அந்த ஆவணத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் தான் கு. வி. மு. ச பிரிவு 195 ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பொருந்தும். ஒரு ஆவணம் நீதிமன்றத்தில் சான்றாவணமாக குறியீடு செய்வதற்கு முன்பு மோசடியாக தயாரிக்கப்பட்டிருந்தால், அதுகுறித்து நீதிமன்றம் புகார் அளிக்க தேவையான. அதனால் பாதிக்கப்பட்டவர் தனிநபர் வழக்காக ஒரு வழக்கை தாக்கல் செய்யலாம் என்று கூறினார்.
புகார்தாரரின் வழக்கறிஞர் செய்த வாதத்தை அப்படியே ஏற்றுக்கொண்ட நீதியரசர் குற்றவியல் நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், வழக்கில் Remand report மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ள நல்ல குற்றவியல் நடுவர் எப்படி எதிரிகளை விடுதலை செய்து உத்தரவு பிறப்பிக்க முடியும் என கண்டனமும் தெரிவித்தார்.
எனவே ஒரு வழக்கில் மோசடியாக தயாரிக்கப்பட்ட ஆவணம் சான்றாவணமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது தெரியவரும் நிலையில் காவல்துறையில் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளிக்கலாம் என பம்பாய் உயர்நீதிமன்றம் நீதியரசர் திரு. T. V. நலவடே தீர்ப்பு வழங்கினார்.
Criminal Appeal No - 1401/2011
விஜய் Vs மகாராஷ்டிரா மாநில அரசு மற்றும் பலர்
2013-2-CRIMES-BOM-296