தீக்கதிரில் ( 14.6.2016 ) வெளிவந்துள்ள வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர்பான கட்டுரை…..
வழக்கறிஞர்கள் போராட்டம் ஏன்?
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் பேசு பொருளாக முன்வரிசைக்கு நகர்ந்துள்ளது. வழக்கறிஞர்கள் சட்டப் பிரிவு 34 (1) ன் படி நடத்தை விதிகளில் சென்னை உயர்நீதிமன்றம் சில திருத்தங்கள் செய்து அது தமிழக அரசாணையில் மே 25 – 2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி "நீதிபதிக்குக் கொடுப்பதாகச் சொல்லி தன் கட்சிக்காரரிடம் பணம் வாங்குவது, நீதிமன்ற ஆவணங்களை உத்தரவுகளை திருத்துவது, நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் பேசுவது, நீதிபதிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது, நீதிமன்ற வளாகத்திற்குள் ஊர்வலம் செல்வது போராடுவது, நீதிமன்றத்தில் மதுபோதையில் ஆஜராவது போன்ற செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞரை நீதிமன்றங்களில் ஆஜராகி வழக்காடுவதற்கு தடை விதிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. இது வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் நடவடிக்கை எடுக்க வேண்டும் !
ஒழுங்கீன வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் வழக்கறிஞர்களுக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. பிறகு ஏன் இதனை எதிர்த்து களமாடி வருகிறார்கள். எவை ஒழுங்கீனம் என்பதும் யார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும்தான் விவாதப் பொருளாகும்.
ஆங்கில அரசு வழக்கறிஞர்கள் சுதந்திரப் போராட்டத்தை வழி நடத்துவதை தடுப்பதற்காக நீதிமன்றமே வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொருந்திய இந்தியன் பார் கவுன்சில் சட்டத்தை 1925ல் இயற்றியது. அப்போது இது கருப்புச் சட்டமாக கருதப்பட்டது. 1961ல் இயற்றப்பட்ட வழக்கறிஞர்கள் சட்டத்தின்படி நீதிமன்றங்கள் வசமிருந்த அத்தகைய அதிகாரம் தன்னாட்சி அமைப்பான பார் கவுன்சிலிடம் வழங்கப்பட்டது. ஆனால் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்நீதிமன்றம் அந்தக் கறுப்புச் சட்டத்தை மீண்டும் கையிலெடுத்திருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பார்கவுன்சில் என்ற தன்னாட்சி அமைப்பு உள்ள போது வழக்கறிஞர்கள் மீது நீதிமன்றமே நேரிடையாக நடவடிக்கை எடுக்கலாம் என்ற விதி வழக்கறிஞர் தொழிலின் சுதந்திரத்தையும், மாண்பையும் பாதிப்பதாகவும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகவும் உள்ளது. அவ்வாறு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டால், வழக்கறிஞர்கள் தங்களின் சுதந்திரம், சுயசார்பு, பேச்சுரிமை, தன்னம்பிக்கை, தைரியத்தை இழக்க நேரிடும். நீதிமன்ற செயல்பாட்டின் பொறுப்புகள், குறைபாடுகள், வெளிப்படைத்தன்மை, ஊழலை வழக்கறிஞர்கள் கேள்வி கேட்க இயலாத நிலை உருவாகும். நீதித்துறையின் தவறுகளை சுட்டிக்காட்டுவதிலிருந்து வழக்கறிஞர்களே தடுக்கப்பட்டால் பிறகு யார்தான் அதைச்செய்வது. இதைத்தான் நீதித்துறை விரும்புகிறதா. யாராலும் கேள்வி கேட்கக் கூடாத ஒரு அமைப்பாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முனைகிறதா.
நீதிபதிகள் நியமனம், பதவி உயர்வு, ஒழுங்கு நடவடிக்கை போன்ற அனைத்து அதிகாரங்களையும் நீதித்துறையே தன் வசம் வைத்துள்ளது. தற்போது வழக்கறிஞர்கள் மீதான அதிகாரத்தையும் தன் கைவசப்படுத்த முயற்சிக்கிறது. நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிட யாரையும் அனுமதிக்க இயலாது எனச் சொல்லி "நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் 2014" ஐ உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதே நீதித்துறை வழக்கறிஞர்களின் சுதந்திரத்தில் சுயசார்பில் தலையிடலாமா. தன்னிடம் சம்பளம் பெறுகிற ஊழியர்களைப்போல் வழக்கறிஞர்களை கட்டுப்படுத்த நினைக்கலாமா ?
நீதிமன்றத்தில் அத்துமீறுகிற வழக்கறிஞர்களை நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மூலம் தண்டிக்கும் அதிகாரம் ஏற்கனவே நீதிமன்றத்திற்கு உள்ள போது தொழில் புரிய தடை விதிக்கும் புதிய விதி அதிகாரக்குவியலின் ஆரக்கால்களாகத்தான் இருக்கும். நீதிமன்றங்கள், நீதிபதிகள், ஊழியர்கள் பற்றாக்குறையால் வழக்குகளின் தேக்கம் கோடிகளாக பல்கிப்பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பார் கவுன்சிலின் சுமையையும் ஏன் நீதித்துறை தன் தோள்களில் ஏற்றிக்கொள்ள வேண்டும்.
பார் கவுன்சில் நடவடிக்கை போதுமானதாக இல்லை என சொல்லப்படுகிறது. இது தவறானது. தமிழ்நாடு பார் கவுன்சில் 2011 முதல் கடந்த 5 ஆண்டுகளில் 100 வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் பார் கவுன்சிலின் அமைப்பியல், தேர்தல், வெளிப்படையான, ஜனநாயக செயல்பாடுகள் அனைத்தையும் தக்க சீர்திருத்தங்கள் மூலம் தரப்படுத்த வேண்டியுள்ளது. அதற்குப் பதிலாக நீதிமன்றமே அதன் அதிகாரங்களை எடுத்துக்கொள்வது சரிதானா. உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி மீது முட்டை வீசிய வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை 7 வருடங்கள் ஆகியும் முடியவில்லை என உயர்நீதிமன்ற ஒயவு நீதிபதி திரு. கே. சந்துரு ஒரு கட்டுரையில் ஆதங்கப்பட்டு அதனால் பார்கவுன்சில் அதிகாரம் நீதிமன்றம் எடுத்துக்கொள்வதை நியாயப்படுத்தியிருந்தார். இந்தியாவையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு, சீக்கிய இனப்படுகொலை, குஜராத் மதப்படுகொலை, ஆட்சியாளர்களின் ஊழல் வழக்குகள் போன்ற அதி முக்கிய வழக்குகளே நீதிமன்றங்களில் 10 - 20 வருடங்கள் கிடையாய் கிடந்து ஜவ்வாய் இழுத்துக் கொண்டிருக்கிறதே. எனவே நீதிமன்றத்திற்கு பதிலாக வேறு அமைப்பிற்கு அதனை மாற்ற சந்துரு போன்றவர்கள் ஒப்புக்கொள்வார்களா.
ஆணித்தரமான வாதம் அச்சுறுத்தலாகலாம்
ஒரு வழக்கறிஞரின் மூலதனமே நீதிமன்றத்தில் அழுத்தமாக ஆணித்தரமாக பேசுவதுதான். ஒரு வழக்கின் நியாயத்தை எடுத்துக்கூற சற்று அழுத்தமாக வாதிடவோ காரசாரமாக விவாதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடனே நீதிபதி இவர் கத்தி பேசினார் என நடவடிக்கை எடுக்க முடியும். ஒரு நீதிபதியின் நடவடிக்கையில் ஐயப்பாடோ, நம்பிக்கை யின்மையோ ஏற்பட்டால் அதனை நீதிமன்றத்தில் தைரியமாகச் சொல்லி வழக்கை வேறு நீதிமன்றத்திற்க்கு மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் புதிய விதிகளின் படி அவ்வாறு சொன்னால் தன்னை அவமதித்தார் என்று நீதிபதி வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க இயலும். இதற்கு பயந்து கொண்டு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாய் பேச இயலாத மெளனிகளாக நடந்து கொண்டால் இறுதியில் பாதிக்கப்படுபவர்கள் கட்சிக்காரர்களே ! எனவே இந்த சட்டத்திருத்தத்தால் பாதிக்கப்படுவது வழக்கறிஞர்கள் மட்டுமல்ல வழக்காடிகளும்தான்.
புகார் அளிப்பதே குற்றமா ;
நீதித்துறையில் எந்தளவு கறை படிந்துள்ளது என்பது உலகறிந்த இரகசியம். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலர் ஓய்வு பெற்ற போது 80% மேலான நீதிபதிகள் கறைபடிந்தவர்கள் என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் நடவடிக்கைக்கு உள்ளானர்வர்கள் மிகச்சொற்பம்தான். வழக்கறிஞர்கள் புகார் அளிக்கவில்லை என்றால் இந்த சொற்ப நடவடிக்கையும் இருக்காது. நீதித்துறை தன் மீது படிந்துள்ள களங்கத்தை சுத்தம் செய்து தன்னைத்தானே துய்மை படுத்திக் கொள்வதுதானே தற்போதைய தேவை. ஆனால் அதற்குப் பதிலாக புகார் அளிக்கும் வழக்கறிஞர்கள் மீதே நடவடிக்கை எடுப்போம் என்பது திகைப்பைத்தான் ஏற்படுத்துகிறது. ஒரு வழக்கறிஞர் அடிமைத் தனமாகச் செயல்படக் கூடாது, ஒரு நீதிபதியின் மீது புகார் கொடுக்கப் போதுமான காரணங்கள் இருந்தால் அதை அளிப்பது வழக்கறிஞரின் உரிமை, கடமை என வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 49 (1) (சி) என்கிறது. ஆனால் இந்த புதிய விதிகள் அந்த உரிமையை பறிப்பதாக உள்ளது.
நீதிபதிக்கு கொடுப்பதாகச் சொல்லி கட்சிக்காரர்களிடம் பணம் பெறக்கூடாது என்ற விதி நகைப்பைத்தான் ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஒட்டு மொத்த நீதித்துறையும் அப்பழுக்கற்றதாக விளங்கினால் இந்த பிரட்சனையே எழாதே. நீதிபதிக்கு கொடுப்பதாக கேட்டாலும் கட்சிக்காரர் நம்பமாட்டாரே. ஆனால் நிலைமை தலைகீழாக அல்லவா உள்ளது. இப்போதல்லாம் வசதி படைத்த கட்சிக்காரர்கள் குறிப்பிட்ட நீதிபதியை நேரடியாக அணுகும் அளவிற்கு பாதை சுலபமாக உள்ளது. வறிய வழக்காடிகள் வழக்கறிஞர் பீஸ் கொடுக்கவே வக்கற்றவர்களாக இருக்கும் போது நீதிபதிக்கு என்று சொல்லி எப்படி அவர்களிடம் பணம் வாங்க இயலும். ஆகவே இவ்விதி நீதித்துறை தன்னைத் தானே களங்கப்படுத்திக்கொள்ளும் வினையைத்தான் புரிகிறது. அதுமட்டுமல்ல ஒரு வழக்கில் ஒருவர் தோற்று விட்டால், ஆத்திரத்தில் அவர் வழக்கறிஞருக்கு வழக்கு நடத்துவதற்காக கொடுத்த கட்டணத்தை, நீதிபதிக்கு கொடுக்க வேண்டும் என்று வாங்கினார் என ஒரு பொய் புகார் அளித்தால் கூட உடனடியாக வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
வழக்கறிஞர்களுக்கே மேல்முறையீடு இல்லையாம் !
மக்கள் மன்றங்கள் இயற்றுகிற சட்டங்களில் எந்த ஒரு தீர்ப்பிற்கும் ஆணைக்கும் மேல்முறையீட்டு உரிமை அளிக்கப்பட்டிருக்கும். ஆனால் நீதிபதிகள் உருவாக்கியுள்ள இந்த விதிகளில் மேல்முறையீடு செய்யும் வழிவகையே செய்யப்படவில்லை என்பதுதான் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் ஊர்வலங்கள் நடத்தக்கூடாது, பதாகைகள் பிடிக்கக்கூடாது, நீதிபதியை கேரோ செய்யக்கூடாது போன்றவை அனைத்துத் தளங்களிலும் போரட்ட உரிமைகளை மறுக்கிற அதிகார பீடங்களின் கருத்துரு என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். மதுபோதையில் ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராவதை எவரும் நியாயப்படுத்தவில்லை. நிச்சியமாக அது மிகக்கடுமையான ஒழுங்கீனம். ஆனால் அப்படி ஒரு நிகழ்வாவது நடந்துள்ளதாக புகார்களோ தரவுகளோ இல்லாத போது இந்த விதியை புகுத்துவது வழக்கறிஞர்களை சிறுமைப்படுத்துவதாக உள்ளது.
2009ல் ஆர்.கே.ஆனந் என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த அறிவுறுத்தலின் படியே இந்த புதிய விதிகள் என சொல்லப்படுகிறது. அப்படியெனில் 7 வருடங்களாக இல்லாமல் தற்போது ஏன் என்கிறார்கள் வழக்கறிஞர்கள். கடந்த ஆண்டு மதுரையில் சில வழக்கறிஞர்கள் ஊழல் நீதிபதிகள் என்று ஒரு பட்டியலை வெளியிட்ட பிறகு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் எதிர்விணை என்கிறார்கள்.
நீதித்துறையை வலுப்படுத்தலாம் வாங்க !
நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் நாணயத்தின் இரு பக்கங்கள் நீதிதேவதையின் இரு கண்கள் எனப்படுகிறார்கள். அப்படியானால் ஒரு பக்கம் மற்ற பக்கத்தை, ஒரு கண் மற்ற கண்ணை அடக்கியாள, பலகீணப்படுத்த நினைப்பது சரிதானா. அது ஒட்டுமொத்த அமைப்பின் சீர்குலைவிற்குத்தான் இட்டுச்செல்லும். நீதித்துறை மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வரும் இன்றைய நிலையில் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் கலந்துரைகள் மூலம் முரண்பாடுகளையும் பிரட்சனைகளையும் பேசித்தீர்த்து ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடும் நம்பிக்கையோடும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நீதித்துறை என்ற அமைப்பை வலுப்படுத்தி பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இயலும்.