சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு பொதுநல வழக்கில், 'ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளும் அரசாங்க ஊழியர்கள்தான். அவர் களுக்கு மட்டும் சலுகை காட்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவி வகிப்பவர்கள் மீதான ஊழல் புகார் குறித்து அரசின் முன் அனுமதி பெறாமல் லஞ்ச ஒழிப்பு போலீஸாரே நேரடியாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி அரசு புதிய உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்திருந்தார்.
அந்த புதிய உத்தரவு இது தான்:
" உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றி அரசு ஊழியர்கள் அனைவரையும் சமமாக பாவித்து அவர்கள் மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்கும் வகையில் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனி தமிழகத்தில் உள்ள எந்த அரசு ஊழியராக இருந்தாலும், அவர்கள் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஊழல் தடுப்பு போலீஸார் நேரடியாக விசாரணை நடத்தவோ, வழக்கு பதிவு செய்யவோ கூடாது.
அரசு ஊழியர்கள் மீது வரும் புகார்களை ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அனுப்பி, அரசின் முன் அனுமதி மற்றும் ஒப்புதலை பெற்ற பிறகே, ஊழல் தடுப்பு போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும ".
இந்த உத்தரவின்படி #ஊழல்_தடுப்பு_போலீஸ் இனி #ஊழல்_தபால்_போலீஸ் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. தங்களுக்கு வரும் புகார்களை அரசுக்கு தபாலில் அனுப்பிவிட்டு அலுவலகத்தில் ஆனந்தமாக டீ குடித்து கதை அடித்து பொழுதை ஓட்டலாம். அரசு ஊழியர்கள் அனைவரும் எந்த கவலையும் இல்லாமல் லஞ்சம் வாங்கலாம். தமிழக அரசின் உச்சகட்ட சாதனை இது என்று சொன்னால் அது மிகையாகாது.